இன்னும் எங்கள்
ஊர் கொஞ்சம்
பத்திரமாகத் தான்
இருக்கிறது
காலையில் ஒரு
குயில் எங்கிருந்தோ
கூவுகிறது
என் வீட்டு
நந்தியாவட்டையிலும்
பவளமல்லி மரத்திலும்
சிட்டுக் குருவிகள்
கொஞ்சிக் கொண்டிருக்கின்றன
அதிகாலை பால் மணிச்சத்தம்
கேட்டுக் கொண்டுதான்இருக்கின்றது
புதிய மனிதர்களையும்
போலீஸ்காரர்களையும்
பார்த்துத் தெரு நாய்கள்
குலைத்துக் கொண்டுதான்
இருக்கின்றன
ஒற்றை ஆட்டுக் கிடா
பத்துப் பெண் ஆடுகளைத்
துரத்திக் கொண்டுதான்
இருக்கிறது
தெருப் பெண்களுக்கு
அருள் பாலிப்பதற்கென்றே
பசுக்கள் காலையிலேயே
தெருவிற்கு வந்து விடுகின்றன
பாலாக்கீரை அரைக்கீரை
பொன்னாங்கண்ணிக்கீரை
பாட்டிகளின் குரல் கேட்டுக்
கொண்டுதான் இருக்கின்றது
கரிசக்குளம் கீரைத்தண்டு
கணபதி விற்றுக்
கொண்டுதான் இருக்கிறார்
ஆனையும் திருமஞ்சனக்
குடமும் அம்பாளுக்குப்
போய்க் கொண்டு
தானிருக்கிறது
செண்பகப் பூ விற்ற
தாத்தாவுக்கு வாரிசுகள்
இல்லை போல
நயினார் குளத்திற்கு
வெளி நாட்டுப்
பறவைகள் வந்து
கொண்டு தானிருக்கின்றன
அதிகச் சிலைகள்
இல்லாததனால்
எங்கள் ஊர் கொஞ்சம்
அழகாகத் தான் இருக்கிறது
-- நெல்லை கண்ணன்
No comments:
Post a Comment