நெல்லை சீமை.....

நெல்லை சீமை.....

Monday, July 30, 2012

திருவள்ளுவர்....




திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன்னு அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும், கணவரிடம் காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சியாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.
பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு” என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார். நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு


என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

ஒரு மணவிழாவில தந்த புத்தகத்தில் இருந்தது. அதை உங்கள் பார்வைக்கு....

தமிழ் எழுத்துக்கள்......



 தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

திருநெல்வேலி சீமை..........

இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் திருநெல்வேலி !!

திருநெல்வேலி அருவாளுக்கு மட்டும் அல்ல அன்பிற்கும் அல்வாவிற்கும் தான் பெயர் பெற்றது

"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.

இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் திருநெல்வேலிதிருநெல்வேலி. இது வீரமான மட்டுமல்ல, ஈரமான ஊரும் கூட. "வாங்க அண்ணாச்சி. சவுக்கியமா இருக்கியளா? இருந்து சாப்டுட்டுத்தான் போணும்" என அன்புக்கட்டளையிடும் சாதி, மத பேதமற்ற மக்கள் நிறைந்த ஊர். வற்றாத தாமிரபரணி நதிக்கரையில் வாடாமல்லியாக பூத்து நிற்கும் திருநெல்வேலி, அந்தக்காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலை நகராகவும் மணம் வீசியது. சுமார் 2ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த திருநெல்வேலி சீமையில் பார்த்து ரசிக்கத்தக்க இடங்கள் நிறைய உண்டு.

குற்றாலம்:

திருநெல்வேலி மாநகரத்தில் இருந்து மேற்கில் சுமார் 50 கி.மீ தூரத்தில் உள்ளது குற்றாலம், மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடி வரும் சிற்றாறு சீற்றம் பெற்று இங்கு அருவிகளாக கொட்டுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பாலருவி, புலியருவி என திரும்பிய திசையெங்கும் இங்கு அருவிகள் மயம்தான். மேற்குத்தொடர்ச்சி மலை யில் நோய்தீர்க்கும் மூலிகைச்செடிகள் அதிகம். இதன் மீது தவழ்ந்து வரும் சிற்றாறுதான் அருவியாகக் கொட்டுகிறது என்பதால், மூலிகைத் தன்மை கலந்த தண்ணீரில் குளிக்க குளிக்க ஆனந்தம் பொங்குகிறது. . ஜுலை மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை குற்றால சீசன் களைகட்டும்.

கூந்தன் குளம்:

வெளிநாட்டு பறவைகளுக்காக இயற்கை அன்னை ஏற்படுத்தித்தந்த இலவச பிரசவ ஆஸ்பத்திரிதான் கூந்தன்குளம். திருநெல்வேலியில் இருந்து சுமார் 38கி.மீ தூரத்தில் நாங்குநேரி தாலுகாவில் அமைந் துள்ளது. இங்குள்ள பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் டிசம் பரில் படையெடுத்து வரும் வெளிநாட்டு பறவைகள் இங்குள்ள நீர்நிலைகளில் தங்கி விடுகின்றன. பின்னர் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து குஞ்சுகளுடன் ஜுன், ஜுலை மாதத்தில் சொந்த நாடு களுக்கு பறந்து விடுகின்றன. சுமார் 35 வகையான பறவைகள் இவ்வாறு ஆண்டுதோறும் வந்து செல்கின்றன. பறவைகளை நேசிப்பவர்களுக்கு இந்த காட்சிகளெல்லாம் மிகவும் பரவசம் அளிக்கக்கூடியது.
முண்டன்துறை:

திருநெல்வேலியில் இருந்து சுமார் 56 கி.மீ தூரத்தில் முண்டன்துறை வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் புலி, சிறுத்தை உள் ளிட்ட பலவகை விலங்குகள் உண்டு. வனத்துறையிடம் அனுமதி பெற்று இங்கு மலையேற்றத்தில் (டிரெக்கிங்) ஈடுபடலாம். காட்டுக்குள் தங்கு வதற்கு வனத்துறை விருந்தினர் மாளிகை மற்றும் அருகில் அம்பாச முத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் போன்றவை உண்டு. குடும்பத்துடன் செல்பவர்கள் இங்கு தங்கி இயற்கை அழகை ரசித்து விட்டு வரலாம்.

அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி:

பாபநாசத்தில் உள்ள அகஸ்தியர் அருவி பிரசித்தம். இதே பகுதியில் எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டும் இன்னொரு அழகான அருவி பாண தீர்த்த அருவி.

முண்டன்துறை வனச்சரகத்தில் இது அமைந்துள்ளது. காரையார் அணையில் இருந்து படகு மூலம் இங்கு செல்லலாம். காட்டுப்பாதை வழியே நடந்தும் செல்லலாம். ரோஜா திரைப்படத்தில் சின்னச்சின்ன ஆசை பாடலில் அழகான ஒரு அருவி இடம் பெற்றிருக்குமே? அது இந்த பாணதீர்த்த அருவிதான். ரோஜா படத்தின் நினைவாக ரோஜா அருவி என்றும் அழைக்கின்றனர். இந்த அருவியின் அழகு உங்களையும் ஆடிப்பாட வைத்து விடும்.

மாஞ்சோலை:

மணிமுத்தாறு அருகே உள்ள ஒரு ஜிலுஜிலு மலைப்பகுதி மாஞ்சோலை. இதை ஒரு மினி ஊட்டி என்று கூட சொல்லலாம். தேயிலைத் தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. கோடையின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க மாஞ்சோலையில் சற்று ஒதுங்கி விட்டு வரலாம்.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்த வரை சுத்தமான தண்ணீர் இங்கு உத்தரவாதம். நகரங்களில் நல்ல உணவு விடுதிகள் உள்ளன. தங்குமிடத்தைப் பொறுத்த வரையிலும் நல்ல லாட்ஜுகள், காட்டேஜ்கள் உள்ளன. அரசுத்துறை காட்டேஜ்களுக்கு முன்பதிவு செய்வது மிகவும் முக்கியம். போக்குவரத்தைப் பொறுத்தவரை திருநெல்வேலிக்கு அருகே தூத்துக்குடியில் விமான நிலையம் உள்ளது. திருநெல்வேலி நகரில் பெரிய ரயில்நிலையம் உள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து தாராளமாக இருக்கிறது. சாலை வசதியும் உள்ளது. கேரளாவுக்கு அருகில் உள்ள மாவட்டம் என்பதால் டைம் இருந்தால் கேரளாவுக்கும் ஒரு விசிட் செய்யும் ஏற்பாட்டுடன் வரலாம்.

ஒண்ணை....சொல்ல மறந்துட்டோமே! ஆ...அதேதான்... திருநெல்வேலி அல்வா. ஊர் முழுதையும் சுத்திப்பார்த்துட்டு அப்டியே திருநெல்வேலியில இருட்டுக்கடை அல்வாவையும் வாங்கிக்கிட்டு திரும்புனீங்கன்னா...பயணம் சும்மா கும்முனு இருக்குமுல்ல".